search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்கை நுண்ணறிவு"

    • கடந்த மாதம் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
    • உலக முழுவதும் ஐரோப்பிய யூனியனை தவிர்த்து குறைந்தது 64 நாடுகளில் இந்த ஆண்டு பொது தேர்தல் நடக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் தேர்தலை சீர்குலைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக மைக்ரோ சாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சீனாவின் ஆதரவு பெற்ற சைபர் குழுக்கள் 2024-ல் நடக்கும் பல்வேறு பொது தேர்தல்களை குறி வைத்துள்ளது. இதற்கு வடகொரியாவின் ஆதரவும் உண்டு. இந்த தேர்தலின் போது நிலவும் பொதுக் கருத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தகவல்களை சமூக வலைதளங்களில் பரவ வைக்க அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

    இந்த ஆண்டு உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, தென் கொரியாவில் முக்கிய தேர்தல் நடைபெறுவதால் தனது நலனுக்கு பயன் அளிக்கும் வகையில் இதனை செயல்படுத்தி இடையூறு செய்ய சீனா திட்டமிட்டுள்ளதாக நாங்கள் மதிப்பிடுகிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மைக்ரோ சாப்ட் நிறுவன அதிகாரி கூறியதாவது:-

    டீப்பேக் மற்றும் நடக்காத நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்பட்ட தவறான மற்றும் மோசடி விளம்பரங்கள் மூலம் அரசியல் விளம்பரத்தை உருவாக்குவது பெரிய அச்சுறுத்தல் ஆகும். இது போன்ற மோசடி விளம்பரங்கள் வேட்பாளர்கள் குறித்து தவறான தகவலை பொதுமக்கள் இடையே பரப்பி அவர்களை தவறாக வழி நடத்தும்.


     செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. இது காலப்போக்கில் அந்நாட்டுக்கு பெரிய பயனளிக்கும்.

    தைவானில் ஆதிக்கத்தை செலுத்துவதற்காக சீனா இதனை சோதித்து பார்த்து உள்ளது. அங்கு போலியான தகவலை பரப்பியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த மாதம் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை சமூக காரணங்களுக்காக பயன்படுத்துவது, பெண்கள் தலைமையில் வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் விவசாயத்தில் புதுமைகள் ஆகியவை குறித்து அவர்கள் விவாதித்தனர்.

    உலக முழுவதும் ஐரோப்பிய யூனியனை தவிர்த்து குறைந்தது 64 நாடுகளில் இந்த ஆண்டு பொது தேர்தல் நடக்கிறது.

    • உலகின் முதல் ஏ.ஐ. மென்பொருள் பொறியாளர் ஆகும்.
    • மனித பொறியாளர்களுக்கு மாற்றாக உருவாக்கப்படவில்லை.

    கோடிங் செய்வது, வலைதளங்கள் மற்றும் மென்பொருள்களை உருவாக்கும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு சேவை உருவாக்கப்பட்டு இருக்கிறது. காக்னிஷன் என்ற நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய சேவைக்கு டெவின் என பெயரிடப்பட்டு உள்ளது. இதுவே உலகின் முதல் ஏ.ஐ. மென்பொருள் பொறியாளர் ஆகும்.

    இந்த சேவையிடம் நீங்கள் என்ன சொன்னாலும் அதனை சிறப்பாக செய்து முடித்துவிடும். புதிய சேவை மனித பொறியாளர்களுக்கு மாற்றாக உருவாக்கப்படவில்லை என்று இதனை உருவாக்கி இருக்கும் காக்னிஷன் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    மனித பொறியாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில் தான் டெவின் உருவாக்கப்பட்டு இருக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மனித பொறியாளர்களுக்கு மாற்றாக இல்லாமல், அவர்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    டெவினின் குறிப்பிடத்தக்க திறன்களில் ஒன்றாக இது கடினமான பணிகளையும் சிந்தித்து, திட்டமிட்டு செய்து முடிக்கும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட முடிவுகளை எடுப்பது, தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது மற்றும் நாளடைவில் சிறப்பாக தன்னை மேம்படுத்திக் கொள்வது என டெவின் கிட்டத்தட்ட மனிதர்கள் மேற்கொள்ளும் பணிகளை சிறப்பாக செய்யும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

    மென்பொருள் பொறியியல் துறையில் SWE-bench கோடிங் பென்ச்மாரக்கில் மென்பொருள்களை மதிப்பிடுவதில் டெவின் அதிநவீன தீர்வை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான பரிசோதனைகளில் டெவின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையில் செயல்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நிஜ உலகின் சவால்களில் டெவின் முந்தைய ஏ.ஐ. மாடல்களை விட அதிகளவு சிறப்பாக செயல்பட்டுள்ளது. அந்த வகையில், இது மென்பொருள் பொறியியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • பெண் தொகுப்பாளருக்கு தொல்லை கொடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    • ரோபோவின் செயலை உணர்ந்த பெண் தொகுப்பாளர் ரோபோவை நோக்கி கையை உயர்த்துகிறார்.

    ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கருவிகள் பல துறைகளிலும் புகுந்துவிட்டது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பல முன்னேற்றங்கள் உள்ளது. அதே நேரத்தில் இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில் சவுதி அரேபியாவில் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட ஆண் ரோபோ, நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பெண் தொகுப்பாளருக்கு தொல்லை கொடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நிகழ்ச்சியின் போது பெண் தொகுப்பாளர் ரோபோ குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்.

    அப்போது அந்த ரோபோ பெண்ணை நோக்கி கையை நீட்டி தகாத முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறது. ரோபோவின் செயலை உணர்ந்த பெண் தொகுப்பாளர் ரோபோவை நோக்கி கையை உயர்த்துகிறார். அதன்பிறகு ரோபோ அந்த செயலை நிறுத்துவது போன்று காட்சிகள் வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் ரோபோவின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • ஆப்பிள் "தானியங்கி கார்கள்" தயாரிப்பில் பல பில்லியன் டாலர்கள் செலவிட்டது
    • சுமார் 2 ஆயிரம் ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு திட்டத்திற்கு மாற்றப்பட்டனர்

    சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க உலகம் முழுவதும் கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள், மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இதில், ஐபோன் (iPhone) எனும் உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனமும்  களம் இறங்கியது.

    "அட்டானமஸ் வெஹிகிள்" (autonomous vehicle) எனப்படும் ஓட்டுனர் இன்றி தானாக இயங்கும் கார்களை உற்பத்தி செய்யும் திட்டத்தில் ஆப்பிள் ஈடுபட்டு பல பில்லியன் டாலர்கள் முதலீடு செய்தது.

    சுமார் 2 ஆயிரம் வல்லுனர்கள் இதில் பணியாற்றி வந்தனர்.

    இத்தகைய வாகனங்களில் பிற கார்களில் உள்ளதை போல் "ஸ்டியரிங் வீல்" மற்றும் "பிரேக்", "கிளட்ச்", "ஆக்சிலரேட்டர்" போன்ற பெடல்கள் இருக்காது. இதன் இயக்கம் "குரல்" மூலம் இருக்குமாறு உருவாக்கப்பட்டு வந்தது.

    ஆனால், இதுவரை இத்திட்டம் எதிர்பார்த்த பலனை தரவில்லை. தானியங்கி காரை உருவாக்க மேலும் பல வருடங்கள் ஆகலாம் என தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து, இந்த தானியங்கி கார் உருவாக்க திட்டத்தை ஆப்பிள் நிறுவனம் கைவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறை வளர்ச்சி அடைந்து வருவதால், அதில் முதலீடுகளை செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் இது குறித்து தற்போது வரை அதிகாரபூர்வ கருத்து தெரிவிக்கவில்லை.

    அமெரிக்காவின் டெஸ்லா நிறுவன கார்களுக்கு சீனாவின் பிஒய்டி (BYD) நிறுவனம் போட்டியாக உள்ளதால், டெஸ்லா, மின்சார கார்களின் விலையை குறைத்தது குறிப்பிடத்தக்கது.

    அதிகரிக்கும் உற்பத்தி செலவு மற்றும் எதிர்பார்த்த அளவு அதிகரிக்காத தேவை ஆகிய காரணங்களால் மின்சார கார் சந்தையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆப்பிள் சரியான முடிவைத்தான் எடுத்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

    • டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.
    • ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் ஏ.ஐ. வீடியோக்களும் முக்கிய பங்காற்ற தொடங்கி உள்ளன.

    இந்த தேர்தல் களத்தில் இதனை ஆளும் கட்சியான தி.மு.க. முதல் முறையாக கையில் எடுத்து செயல்படுத்தி உள்ளது. சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டையொட்டி மறைந்த தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டை வாழ்த்துவது போன்ற ஏ.ஐ. வீடியோ வெளியிடப்பட்டது.

    தி.மு.க. மாநாட்டு பந்தலிலும் இது ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் மூலம் கருணாநிதியே மாநாட்டுக்கு நேரில் வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இதே போன்று முன்னாள் மத்திய மந்திரியும் தற்போதைய எம்.பி.யுமான டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும் அவரை கருணாநிதி வாழ்த்துவது போன்ற வீடியோ தயாரித்து வெளியிடப்பட்டது.

    இப்படி தி.மு.க. சார்பில் இரண்டு வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகி அது தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.

    இதேபோன்று மறைந்த தங்கள் தலைவர்கள் ஏ.ஐ. வீடியோ மூலம் பேசுவதற்கான ஏற்பாடுகளையும் மற்ற கட்சியினரும் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடியோவை தயாரித்து வெளியிட அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதே போன்று மற்ற அரசியல் கட்சியினரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோக்களை தயாரிக்க முடிவு செய்து உள்ளனர். இந்த வீடியோக்கள் மூலம் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் உள்ளன என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

    குறிப்பாக இரண்டு பிரிவாக பிரிந்து கிடக்கும் கட்சியினர் மறைந்த தங்களது தலைவர்களை பயன்படுத்தி மாற்று அணியினரை விமர்சிக்க முடியும் என்ப தால் அது அரசியல் களத்தில் மோதல் போக்கை உரு வாக்க வழிவகுக்கும் என்கிறார்கள்.



    உதாரணத்துக்கு தமிழகத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

    அவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிப்பது போன்று ஏ.ஐ. வீடியோக்களை வெளியிட்டால் அது இரண்டு பிரிவினருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறி உள்ளனர்.

    தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. இந்த அணிகளை சேர்ந்தவர்களும் மறைந்த தங்களது தலை வர்களை ஏ.ஐ. வீடியோக்கள் மூலமாக உருவாக்கி விமர்ச னம் செய்யவும் வழி வகுக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது நல்ல வழிக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாக உள்ளது. அதே நேரத்தில் அதனை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கணிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • கவுகாத்தி பிரக்ஜியோதீஷ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மேலும் வளர்ச்சி பெறும் என தெரிவித்துள்ளார்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பிரக்ஜியோதீஷ்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    செயற்கை நுண்ணறிவு குறித்து இன்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி அனைத்து இடங்களிலும் செயற்கை நுண்ணறிவு இருக்கிறது. உங்கள் மொபைல் போன் உங்களை கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு உள்ளீடும், உங்களைப் பற்றிய தகவலை தெரிவிக்கிறது.

    நீங்கள் யார், உங்களுக்கு பிடித்தது என்ன என்பது அதற்கு நன்றாக தெரியும். உங்களைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கோ, அல்லது உங்களுக்கே தெரியாத விஷயங்கள் கூட உங்கள் கணிணிக்கு தெரிந்திருக்கும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மேலும் வளர்ச்சி பெற்று, இங்குள்ள பல விஷயங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் என தெரிவித்தார்.

    • "இம்மர்சிவ் கேம்ஸ்" விளையாட்டுக்களில் குழந்தைகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்
    • மெய்நிகர் தொழில்நுட்ப விளையாட்டுக்களில் எச்சரிக்கை தேவை என்றார் காவல் ஆணையர்

    சமீப சில வருடங்களாக இணையதளத்தில், "விஆர்" (VR) எனப்படும் மெய்நிகர் உண்மை (Virtual Reality) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனர்கள் விளையாடும் பல விளையாட்டுக்கள் பிரபலமடைந்துள்ளன.

    வீட்டிற்கு வெளியே செல்லாமல் குழுந்தைகளால் விளையாட முடியும் என்பதால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதற்கு தேவையான ஹெட்செட் போன்ற உபகரணங்களை வாங்கி தந்து ஊக்குவிக்கின்றனர்.

    மெடாவெர்ஸ் (Metaverse) எனப்படும் வளர்ந்து வரும் இத்தொழில்நுட்பத்தில், தொலைதூரத்தில் உள்ள ஒருவருடனோ அல்லது பலருடனோ, அல்லது ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வழியாகவோ, குழந்தைகளால் விளையாட முடிகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்தில் 16 வயது சிறுமி ஒருவர் இதற்கான உபகரணங்களுடன் தனது வீட்டில் இருந்தபடியே "இம்மர்சிவ் கேம்ஸ்" (immersive games) எனப்படும் "மூழ்கடிக்கும் விளையாட்டு" வகைகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினார்.

    மெடா (Meta) நிறுவனத்தின் (முன்னர் ஃபேஸ்புக்) "ஹொரைசான் வேர்ல்ட்ஸ்" (Horizon Worlds) எனப்படும் அந்த மெய்நிகர் விளையாட்டில் "அவதார்" (avatar) எனப்படும் அவரை போன்றே தோற்றமுடைய மெய்நிகர் வடிவத்துடன், பல இடங்களில் இருந்து பலர் தங்கள் அவதார் உருவங்களுடன் விளையாடி வந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக பிற அவதார்கள் (அதனை இயக்குபவர்களால்) அச்சிறுமியின் அவதார் மீது பாலியல் தாக்குதல் நடத்தியது.

    சிறுமி மீது நேரடியான பாலியல் தாக்குதல் நடக்கவில்லை என்றாலும் மெய்நிகரில் நடைபெற்ற "கூட்டு பாலியல் தாக்குதல்" அச்சிறுமிக்கு உணர்வுபூர்வமாகவும், உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து, அச்சிறுமியின் குடும்பத்தினர், இங்கிலாந்து காவல்துறையிடம் இது குறித்து புகாரளித்தனர். காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இவ்விளையாட்டு தளம் குறித்து முன்னரே இது போன்ற புகார்கள் சில முறை எழுப்பபட்டும், சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இச்சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள இங்கிலாந்து உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி (James Cleverly), "இது போன்ற தாக்குதல்களை குறைத்து மதிப்பிடாமல் தீவிரமாக நாம் பார்க்க வேண்டியது அவசியம்" என தெரிவித்துள்ளார்.

    "வேலி இல்லாத மெய்நிகர் விளையாட்டுகளில் தாக்குதலை நடத்த இரை தேடும் மிருகங்கள் போல் பல விஷமிகள் அதிகம் வர வாய்ப்புள்ளதால், இவற்றை தடுக்கும் விதமாக சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்" என இங்கிலாந்து காவல் துறை தலைவர் "இயான் க்ரிஷ்லி" (Ian Critchley) தெரிவித்துள்ளார்.

    வெளியில் விளையாட சென்றால் மட்டும்தான் ஆபத்து என எண்ணி வீட்டிற்கு உள்ளே குழந்தைகள், நவீன தொழில்நுட்பங்களை பயனபடுத்தும் போது அவர்களின் விளையாட்டுக்களை பெற்றோர் கண்காணிக்காமல் இருப்பது தவறு என இணையதள வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • பணி நீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டுள்ளது.
    • செலவீனங்களில் 10 சதவீதம் வரை சேமிக்க முடியும்.

    பேடிஎம்-இன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன் தனது விற்பனை, பொறியியல் பிரிவுகளில் பணியாற்றி வந்த 100-க்கும் அதிக ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறது. நிர்வாக ரீதியிலான பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தியதை அடுத்து பணி நீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டுள்ளது.

    செலவீனங்களை குறைக்கும் நோக்கிலும், பணிகளை எளிமையாக்கும் நோக்கிலும் பல்வேறு பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பேடிஎம் பயன்படுத்த துவங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது ஊழியர்களுக்கான ஒட்டுமொத்த செலவீனங்களில் 10 சதவீதம் வரை சேமிக்க முடியும் என்று பேடிஎம் தெரிவித்து இருக்கிறது.

     


    முன்னதாக 2021-ம் ஆண்டு பேடிஎம் நிறுவனம் 500-இல் இருந்து 700 பேர் வரை பணிநீக்கம் செய்தது. அப்போது ஊழியர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றவில்லை என குற்றம்சாட்டி பணிநீக்க நடவடிக்கையை பேடிஎம் மேற்கொண்டது. 

    • 20க்கும் மேற்பட்ட சிறுமியர்களின் ஆபாச வீடியோக்கள் வலம் வந்தது
    • விரைவில் இணையத்தில் சுனாமி போல் பரவும் என சூசி ஹார்க்ரீவ்ஸ் தெரிவித்தார்

    ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் அதனால் விளையும் நன்மை-தீமைகள் ஆகியவை குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல உலக நாடுகள் விவாதித்து வருகின்றன.

    இது குறித்து ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எடுத்த முயற்சிகளின் காரணமாக வளர்ச்சி அடைந்த நாடுகளின் பிரதிநிதிகளை கொண்ட ஒரு சந்திப்பு, இங்கிலாந்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. சீனாவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டு இந்த முயற்சிக்காக தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி அளித்தது.

    இதற்கிடையே, ஐரோப்பிய நாடுகளில் புதுவித சிக்கல் ஒன்றை ஏஐ ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அல்மென்ட்ராலெஹோ (Almendralejo) நகரில் சில நாட்களுக்கு முன் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் 11லிருந்து 17 வயது வரை உள்ள 20க்கும் மேற்பட்ட சிறுமியர்களின் ஆபாச புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

    மிரியம் அல் அடிப் (Miriam Al Adib) எனும் பெண்மணி தனது மகள் உட்பட பல சிறுமிகளின் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றப்பட்டு, ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையத்தில் வெளி வந்துள்ளதாக புகாரளித்தார். பாதிப்புக்குள்ளான சிறுமிகளின் பெற்றோர்கள் இது குறித்த விழிப்புணர்வு குழு அமைத்து இதனை எதிர்த்து வருகின்றனர்.

    "தங்கள் பெற்றோரிடம் இது குறித்து பேச தயங்கும் சிறுமிகள் தற்போது எங்கள் குழுவிடம் மனம் திறக்கிறர்கள் " என மிரியம் தெரிவித்தார். இவரை தொடர்ந்து பல தாய்மார்கள் இதே குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர்.

    அங்குள்ள பள்ளிகளில் சிறுவர் சிறுமியர்களுக்கு ஏஐ-யினால் ஏற்பட கூடிய அபாயங்களை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது.


    இங்கிலாந்தில் நடந்த ஏஐ குறித்த சந்திப்பில், அந்நாட்டின் உள்துறை செயலர் சுவெல்லா ப்ரேவர்மேன், "குழந்தைகள் ஆபாச உள்ளடக்கங்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.

    "அனைத்து நாடுகளும் இது குறித்த நடவடிக்கையை உடனடியாக எடுத்தாக வேண்டும். எதிர்காலத்தில் இது போன்று செயற்கை நுண்ணறிவின் உதவியில் உருவாக்கப்படும் ஆபாச உள்ளடக்கங்கள், சமூக வலைதளங்களிலும், இணையத்திலும் சுனாமியை போல் பரவி விடும். இது இனிமேல்தான் ஆரம்பமாக போகும் ஆபத்து அல்ல; ஆரம்பமாகி விட்ட ஆபத்து" என இணைய உள்ளடக்க கண்காணிப்பு அமைப்பின் (Internet Watch Foundation) தலைவர் சூசி ஹார்க்ரீவ்ஸ் (Susie Hargreaves) தெரிவித்தார்.

    குழந்தைகள் மற்றும் பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை கொண்டு செயற்கை நுண்ணறிவின் மூலம் அச்சு அசலாக அவர்களை போலவே பிம்பங்களை உருவாக்கி ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கும் செயலிகளை இணையத்திலிருந்து இலவசமாகவே பயனர்கள் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம். இது குற்றவாளிகளை சுலபமாக செயல்பட உதவுகிறது.

    சில தினங்களுக்கு முன் இந்தியாவில் புகழ் பெற்ற இரு நடிகைகளை, ஏஐ தொழில்நுட்ப உதவியால் ஆபாசமாக சித்தரித்த வீடியோக்கள் இணையத்தில் பரவியது. இவை ஏஐ தொழில்நுட்பத்தால் சுலபமாக உருவாக்கப்பட்டவை  என்பது பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


    ஒரு பெண், சிறுமி அல்லது சிறுவன் மீதான நேரடியான பாலியல் தாக்குதல்களில், அவர்களை குற்றவாளிகள் நேரில் சந்தித்துதான் தாக்குதலை அரங்கேற்ற வேண்டும். ஆனால், தற்போது கிளம்பியுள்ள புது சிக்கலில், இணையத்தில் தாங்களாகவே பெண்கள் அல்லது குழந்தைகள் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ குற்றவாளிகள் சுலபமாக உலகின் எந்த மூலையிலிருந்தும் பதிவிறக்கம் செய்து, ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட முடியும்.

    இந்தியாவில் இது குறித்து விழிப்புணர்வோ, சட்டங்களோ இதுவரை இல்லை என்பதே உளவியல் வல்லுனர்களின் கவலையாக உள்ளது.

    • 7 வருடங்களுக்கு முன்பு ஒரு உறுதியளித்து அதனை செய்து காட்டினோம்
    • இந்திய மக்களுக்கும், அரசாங்கத்திற்கும், தொழில்துறைக்கும் இது பயன்படும்

    இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவன குழுமம் ரிலையன்ஸ்.

    இந்நிறுவனத்தின் ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் 2016 செப்டம்பரில் தனது சந்தாதாரர்களுக்கு இலவசமாக 4G எனப்படும் நான்காம் தலைமுறை இணைய சேவை மற்றும் அழைப்பு வசதியை இலவசமாக கொடுத்தது. குறிப்பிட்ட காலம் மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டாலும், பிறகு அதனை நீட்டித்து கொண்டே சென்றது.

    அதிரடியாக ஜியோவின் சேவை கட்டணங்கள் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததால், பல புதிய சந்தாதாரர்களும் இதில் இணைந்தனர். இதன் காரணமாக பிற தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்கள் சேவை கட்டணத்தை குறைத்து தர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

    இந்நிலையில், உலகெங்கும் பரவி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்க வைக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார். இது பற்றிய அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46-வது வருடாந்திர பொது கூட்டத்தில் அவர் வெளியிட்டார். அப்போது முகேஷ் அம்பானி கூறியதாவது..,

    "களைப்பே இல்லாத இந்தியாவின் சக்தியை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. முழுக்க முழுக்க தன்னம்பிக்கையால் தூண்டப்பட்ட ஒரு புதிய இந்தியா இது. புதுமைகளுக்கும், வளர்ச்சிக்கும், தேச முன்னேற்றத்திற்கும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட வேண்டும். உலகளாவிய போட்டி திறன் வளர்ப்பில் செயற்கை நுண்ணறிவு தவிர்க்க முடியாதது. இதனை இந்தியாவும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்."

    "இதன்படி, 2 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு திறனுள்ள செயற்கை நுண்ணறிவுக்கான கணினி திட்டங்களை ரிலையன்ஸ் செயல்படுத்தும். 7 வருடங்களுக்கு முன்பு, அனைவருக்கும் இணைய சேவை தருகிறோம் என நாங்கள் வாக்களித்தோம். அதனை நிறைவேற்றியும் காட்டி இருக்கிறோம். இன்று உங்களுக்கு மீண்டும் ஒரு வாக்குறுதியை அளிக்கிறோம். எல்லோருக்கும், எங்கேயும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கிடைக்க செய்வோம் என உறுதியளிக்கிறோம். இந்தியாவிற்கு ஏற்ற செயல் வடிவங்களில் செயற்கை நுண்ணறிவு கட்டமைக்கப்படும்."

    "இது இந்திய மக்களுக்கும், அரசாங்கத்திற்கும், வர்த்தகங்களுக்கும், தொழில்துறைக்கும் பயன்படும் வகையில் அமையும். இதற்கான எல்லா தகவல்களும், தரவுகளும், திறனும், திறமை வாய்ந்த வல்லுனர்களுக்கும் இந்தியாவில் பஞ்சமில்லை," என்று அவர் தெரிவித்தார்.

    4ஜி சேவையில் புரட்சி செய்தது போல், செயற்கை நுண்ணறிவிலும் ஜியோ கால்பதிக்க போவதால் சந்தாதாரர்கள் மட்டுமின்றி அனைவரும் உற்சாகத்துடன் ரிலையன்ஸ்-இன் அடுத்தக் கட்ட நகர்வை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    • ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் தோற்றத்தையும் நடத்தையையும் பிரதிபலிக்கும் வகையில் டீப்பேக் தொழில் நுட்பத்தால் கவனமாக வடிவமைக்கப்படுகிறது.
    • www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.

    சென்னை:

    ஏ.ஐ. என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.

    இதன் மூலமாக மனிதர்களை போன்று மாற்று உருவத்தை உருவாக்க முடியும் என்பதை பயன்படுத்தி போலியான நபர்களை உருவாக்கி திடுக்கிட வைக்கும் துணிகர மோசடி அரங்கேற தொடங்கி இருப்பதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    டீப்பேக் தொழில்நுட்பம், உண்மையான ஆடியோ, வீடியோ அல்லது புகைப்படங்களைப் போன்று போலியான ஆடியோ, வீடியோ அல்லது புகைப்படங்கள் உருவாக்க உபயோகிக்கப்படுவதால் பல்வேறு வகையான மோசடிகளைச் செய்வதற்கு வழி வகுக்கிறது.

    ஆரம்பத்தில், இந்தத் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகப் திரைப்படத் தயாரிப்பாளர்களால் தடையின்றி நடிகர்களை காட்சிகளில் ஒருங்கிணைக்கவும் அல்லது வரலாற்று நபர்களைப் போல சித்தரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், தொழில்நுட்பம் வளர்ந்தவுடன், குற்றவாளிகள் இந்த சக்தியைப் தவறாகப் பயன்படுத்த முற்படுகிறார்கள்.

    செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ அழைப்பு மோசடியானது அரங்கேற தொடங்கி உள்ளது.

    மோசடி செய்பவர்கள் முதலில் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்ற நம்பகமான நபர்களின் திருடப்பட்ட படங்கள் அல்லது ஆன்லைனில் கிடைக்கும் புகைப்படங்களைப் பயன்படுத்தி, அவர்களைப் போல் ஒரு போலி கணக்கை உருவாக்குகின்றனர்.

    செயற்கை நுண்ணறிவு மூலம் டீப் பேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் யதார்த்தமான வீடியோ அழைப்புகளை சமூக ஊடகங்கள், டேட்டிங் செயலிகள் அல்லது பிற ஆன்லைன் தளங்களில் உருவாக்கி பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது சக ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்து அவர்களை ஏமாற்றுகிறார்கள். பின்னர், பாதிக்கப்பட்டவரிடம் அவசர உணர்வை உண்டாக்கி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறு கூறுகின்றனர்.

    ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் தோற்றத்தையும் நடத்தையையும் பிரதிபலிக்கும் வகையில் டீப்பேக் தொழில் நுட்பத்தால் கவனமாக வடிவமைக்கப்படுகிறது. வீடியோவை கையாளுதலுடன் கூடுதலாக, மோசடி செய்பவர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட குரல் தொகுப்பைப் பயன்படுத்தி, ஆள் மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் குரலைப் பிரதிபலிக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு வீடியோ அழைப்பு மோசடிகளை எவ்வாறு தடுப்பது என சைபர் கிரைம் கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் குமார் கூறியதாவது:-

    தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்.

    நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது சக பணியாளர் எனக் கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து வீடியோ அழைப்பைப் பெறும்போது, பணப் பரிமாற்றம் செய்வதற்கு முன் அவர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க அவர்களின் தனிப்பட்ட மொபைல் எண்ணுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவும்.

    ஆன்லைனில் நீங்கள் பகிரும் தனிப்பட்ட தகவலின் அளவைக் கட்டுப்படுத்துங்கள் மற்றும் உங்கள் தகவலுக்கான அணுகலைக் கட்டுப் படுத்த சமூக ஊடகத்தளங்களில் உள்ள தனியுரிமை அமைப்புகளைச் சரிசெய்யவும்.

    அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து உங்கள் கணக்குகளைப் பாதுகாக்க, பல காரணி அங்கீகாரம் மற்றும் பிற அடையாளச் சரிபார்ப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தவும்.

    நீங்கள் இது போன்ற வீடியோ கால் மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றவும்.

    சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.

    மோசடி நடந்த தளத்தை தொடர்பு கொண்டு மோசடி செய்தவரின் சுயவிவரத் தகவல் மற்றும் நீங்கள் சேகரித்த ஆதாரங்கள் உட்பட அனைத்து தொடர்புடைய விவரங்க ளையும் அவர்களிடம் வழங்கவும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கேரள மாநிலத்தில் இந்த மோசடி நடைபெற்றிருப்பதாகவும் அதன் காரணமாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • ஏஐ குறித்து கேமரூன் இதற்கு முன்பும் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.
    • மனிதர்களால் தலையிட முடியாத வேகத்தில் செயற்கை நுண்ணறிவினால் செயல்படும் கணினிகள் இயங்க தொடங்கும்.

    உலக புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். அவர் இயக்கத்தில் 1984ல் வெளிவந்து உலகெங்கிலும் வசூலை அள்ளி குவித்த திரைப்படம் "தி டெர்மினேட்டர்". இத்திரைப்படத்தில் அதிநவீன அறிவாற்றல் மிக்க ஆயுதங்கள் மனித இனத்தையே அழிக்க முற்படுவதாக கதை அமைந்திருக்கும். அந்த படத்தில் வரும் டெர்மினேட்டர் போன்று, இப்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆபத்தானது என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

    ஏஐ (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்த கூடிய தாக்கம் குறித்து உலகெங்கிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதன் சாதக பாதகங்கள் குறித்து இரு விதமான கருத்துக்கள் நிலவுகிறது. இது குறித்த தனது கவலைகளை ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருக்கிறார்.

    அவரது திரைப்படத்தில் வருவது போன்று எதிர்காலத்தில் நிகழுமா? என கேட்டபோது அவர் கூறியதாவது:

    ஆம். அவ்வாறு நடக்கும் என்று நம்புபவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். 1984லேயே (திரைப்படம் மூலம்) நான் எச்சரித்திருந்தேன். நீங்கள் கேட்காமல் அலட்சியப்படுத்தினீர்கள். செயற்கை நுண்ணறிவால் விளையக்கூடிய ஆபத்துக்களிலேயே ஆயுதங்கள் உற்பத்திக்கு அவற்றை பயன்படுத்துவதில்தான் அதிக அபாயம் உள்ளது. அணு ஆயுத போர் போன்ற நிலை உருவாகலாம். ஒருவர் இல்லையென்றால் மற்றொருவர் இதில் ஈடுபட்டு நிலைமையை மோசமடைய செய்து விடுவார்கள். மனிதர்களால் தலையிட முடியாத வேகத்தில் செயற்கை நுண்ணறிவினால் செயல்படும் கணினிகள் இயங்க தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏஐ குறித்து கேமரூன் இதற்கு முன்பும் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார். ஏஐ ஏராளமான நன்மைகளைக் கொண்டிருந்தாலும், அது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்றார். மேலும், நமக்குத் தெரியாமல், அனைத்து தகவல்களையும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கணினிகள் உலகை கையாளக்கூடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த துறையில் உள்ள முன்னணி நிபுணர்களும் கேமரூனின் சிந்தனையை ஒட்டியே கருத்துக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஓபன்ஏஐ, கூகுள் போன்ற பெரிய நிறுவன அதிபர்கள், கல்வியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொழில்முனைவோர்களுடன் இணைந்து ஏஐ விளைவிக்க கூடிய அபாயங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். தொற்றுநோய்களையும் அணுசக்தி யுத்த அபாயங்களையும் ஒழிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு இணையாக இதற்கும் முன்னுரிமை தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    ஏஐ அமைப்புகளால் ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்யும் வரை ஏஐ சார்ந்த அமைப்புகளுக்கு பயிற்சி அளிப்பது 6-மாத காலமாவது நிறுத்தப்பட வேண்டும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் ஆப்பிள் தலைவர் ஸ்டீவ் வோஸ்னியாக் உட்பட 1,000க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மற்றும் நிர்வாகிகள் கையெழுத்திட்ட கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ×